மகனின் வெளிப்பாடு – ஏ.டபிள்யூ. டோசர்

ஆவணி 1, 2026 ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் எழுதியது

இன்றைய காலத்தில் கடவுள் மனிதர்களாகிய நம்மிடம் என்ன சொல்லுகிறார்? சுருக்கமாகச் சொன்னால், அவர், “இயேசு கிறிஸ்து என்னுடைய நேச குமாரன். அவருக்குச் செவிகொடுங்கள்!” என்று சொல்லுகிறார். இயேசுவின் மூலமாக நம் தலைமுறைக்குக் கடவுள் சொல்லும் செய்தியைப் பலர் கேட்க விரும்பாததற்கான காரணம் என்னவென்று புரிந்துகொள்வது கடினம் அல்ல. இயேசுவின் வழியாக வரும் கடவுளுடைய செய்தி, நம்முடைய ஒழுக்கத்தைப் பற்றிய ஒரு தீர்ப்பு மாதிரி. அது விசுவாசம், மனசாட்சி, நடத்தை, கீழ்ப்படிதல், உண்மையுள்ளம் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. மக்கள் இந்தச் செய்தியை நிராகரிக்கிறார்கள். பைபிளை அவர்கள் நிராகரித்த அதே காரணத்தால்தான் இதையும் புறக்கணிக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தை சொல்லும் ஒழுக்க அதிகாரத்துக்குள் இருக்க அவர்கள் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாகக் கடவுள் பல வழிகளில் பேசினார். அவர் பரிசுத்தமான மனிதர்களை ஏவி, அந்தச் செய்தியின் பகுதிகளை ஒரு புத்தகமாக எழுத வைத்தார். கடவுள் அதை எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா கிறிஸ்தவ நெறிகளுக்கும் இறுதியான அளவுகோலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்கள் அதை விரும்பாமல், அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

சிந்தனை:
கடவுள், ஒளியாக இருக்கும் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் வழியாகப் பேசுகிறார். ஒளி, இருளில் இருக்கும் கேவலமான பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிடும். நாம் அந்த ஒளியை வரவேற்று நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்கலாம். இல்லையெனில், இருளில் மறைந்துகொள்ள அதைவிட்டு ஓடலாம். ஆனால், கடவுளுடைய ஒளியிலிருந்து மறைந்திருப்பது யாராலும் முடியாது.

ஜெபம்:
கடவுளே, என்னை ஆராய்ந்து பார்த்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். நித்திய வழியில் என்னை நடத்தும். இயேசுவின் நிமித்தம்.