“பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.”
வாழ்வின் தெய்வீகக் கட்டளை – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்
மத்தேயு 5:38-48-ல் நம்முடைய ஆண்டவர் நமக்குத் தரும் அறிவுரை என்னவென்றால், நாம் எல்லாரிடமும் தாராள மனப்பான்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான். உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், உங்கள் இயல்பான உணர்வுகளின்படி வாழ்வதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எல்லாருக்குமே இயல்பான விருப்பங்கள் உண்டு— சிலரை நமக்கு பிடிக்கும், சிலரை பிடிக்காது. ஆனால், அந்த விருப்பங்களும் வெறுப்புகளும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஆள நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நமக்கு விருப்பமில்லாதவர்களோடு கூட, “அவர் வெளிச்சத்திலிருக்கிறதுபோல நாமும் வெளிச்சத்திலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1 யோவான் 1:7).
இங்கே நம்முடைய ஆண்டவர் நமக்குக் காட்டும் மாதிரி ஒரு நல்ல மனிதரையோ, அல்லது ஒரு நல்ல கிறிஸ்தவரையோ பற்றியது அல்ல, மாறாக தேவனைப் பற்றியதே ஆகும். “…பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரணமுள்ளவராய் இருக்கிறதுபோல, நீங்களும் பூரணமுள்ளவர்களாயிருங்கள்.” அதாவது, தேவன் உங்களுக்கு என்ன காட்டினாரோ, அதை மற்றவர்களுக்கும் காட்டுங்கள். மேலும், நீங்கள் “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரணமுள்ளவராய் இருக்கிறதுபோல” பூரணமுள்ளவர்களா இல்லையா என்பதை நிரூபிக்க, தேவன் உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏராளமான வாய்ப்புகளைத் தருவார். ஒரு சீஷனாக இருப்பது என்றால், மற்ற மனிதர்கள் மேல் தேவனுக்கு இருக்கும் விருப்பத்தோடு உங்களை நோக்கமாக இணைத்துக் கொள்வதாகும். இயேசு கூறுகிறார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவான் 13:34-35).
கிறிஸ்தவ சுபாவத்தின் உண்மையான வெளிப்பாடு வெறும் நன்மை செய்வதில் இல்லை, தேவனைப்போல மாறுவதில்தான் இருக்கிறது. தேவனுடைய ஆவியானவர் உங்களை உள்ளிருந்து மாற்றியிருந்தால், உங்களுடைய வாழ்க்கையில் வெறும் மனித நற்குணங்கள் மட்டுமல்ல, தெய்வீக குணங்களே வெளிப்படும். நமக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவன், தேவனுடைய ஜீவனாகவே தன்னை வெளிப்படுத்தும்; மாறாக, தேவபக்தியாக இருக்க முயலும் மனித வாழ்க்கையாக அல்ல. தேவனுடைய கிருபையின் விளைவாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் ஒருவனுக்கு இயல்பானதாக மாறுவதுதான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியம். இந்த அனுபவம் தேவனுடன் நெருக்கமான ஐக்கியத்தில் இருக்கும் நேரங்களில் மட்டுமல்ல, நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் வெளிப்படும். குழப்பத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்கும்போது, அதற்கெல்லாம் மத்தியிலும் ஆச்சரியமான அமைதியோடும் உறுதியோடும் நிலைநிற்கக்கூடிய பலன் நமக்கு இருப்பதை நாம் கண்டு வியப்படைவோம்.
பிரசங்கி 4-6; 2 கொரிந்தியர் 12
ஆஸ்வால்டின் ஞானம்
நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கே மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள், பிறகு முடிந்தவரை தேவையற்றவற்றை விலக்கிவிட்டு, கிறிஸ்துவின் சிலுவை என்னும் அடித்தளத்திற்குத் திரும்பி வாருங்கள். எனது உன்னதமானதை அவருடைய மேன்மைக்காக, நவம்பர் 25, 848 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.