Luke 22:28
“பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள்.”
Daily Devotionals
NEW MERCIES

நீங்கள் இயேசுவோடு தொடர்ந்து செல்லுகிறீர்களா?

புரட்டாதி 19, 20262 நிமிட வாசிப்பு

நம்முடைய சோதனை நேரங்களில் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவருடைய சோதனைகளில் நாம் அவரோடு தொடர்ந்து போகிறோமா? இயேசுவால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனுபவித்த அந்தக் கணத்திலிருந்தே, நம்மில் பலர் அவரோடு தொடர்வதை விட்டுவிட்டு பின்வாங்கிவிடுகிறோம். தேவன் உங்கள் சூழ்நிலைகளை மாற்றும்போது, நீங்கள் இயேசுவோடு தொடர்ந்து போகிறீர்களா, அல்லது உலகம், மாம்சம், பிசாசு பக்கம் நிற்கிறீர்களா என்று கவனித்துப் பாருங்கள். நாம் அவருடைய நாமத்தைத் தரித்திருக்கிறோம். ஆனால் அவரோடு தொடர்ந்து போகிறோமா? “அதுமுதல் அவருடைய சீஷர்களில் அநேகர் பின்வாங்கிப்போய், அதன்பின் அவரோடேகூட நடக்கவில்லை” (யோவான் 6:66).

இயேசுவின் சோதனைகள் அவருடைய பூலோக வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தன. நமக்குள்ளே வாழும் தேவ குமாரனுடைய வாழ்க்கையிலும் அவை தொடர்ந்து இருக்கும். இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நாம் இயேசுவோடு தொடர்ந்து போகிறோமா?

தேவன் நம்மைச் சுற்றி கொண்டு வரும் சில காரியங்களில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அது ஒருபோதும் ஆகக்கூடாது! நம்முடைய சூழ்நிலைகளை ஏற்படுத்துபவர் தேவனே. அவை எதுவாக இருந்தாலும், அவருடைய சோதனைகளில் அவரோடு தொடர்ந்து நிலைத்திருந்து அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அவை அவருடைய சோதனைகள்; நமக்குரியவை அல்ல. நமக்குள்ளே வாழும் தேவ குமாரனுடைய வாழ்க்கைக்கு வரும் சோதனைகள் அவை. நம்முடைய சரீர வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் கனமே அடங்கியிருக்கிறது. நமக்குள்ளே இருக்கும் அவருடைய வாழ்க்கையைத் தாக்குகிற எல்லாவற்றிலும் நாம் தேவ குமாரனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?

நீங்கள் இயேசுவோடு தொடர்ந்து போகிறீர்களா? அந்தப் பாதை கெத்செமனே வழியாகவும், நகர வாசல் வழியாகவும், “பாளையத்திற்கு வெளியே” (எபிரெயர் 13:13) வரையும் செல்கிறது. அந்தப் பாதை தனிமையானது. பின்பற்றிச் செல்ல ஒரு காலடித் தடம் கூட இல்லாத இடம் வரை அது நீள்கிறது—ஆனால் “எனக்குப் பின்சென்று வாருங்கள்” (மத்தேயு 4:19) என்று சொல்லும் சத்தம் மட்டும் அங்கே கேட்கும்.

பிரசங்கி 1-3; 2 கொரிந்தியர் 11:16-33


ஆஸ்வால்டின் ஞானம்

எந்த வேதனையையும் அனுபவிக்காதவர்களிடம் இயேசு சொல்கிறார்: “உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை; உங்கள் சொந்தக் கால்களில் நின்று, உங்கள் தோள்களை நிமிர்த்திக் கொள்ளுங்கள். தன்னால் சமாளிக்க முடிந்ததைவிட பெரிய சுமை தன்னிடம் இருக்கிறது என்பதையும், தன்னால் தொட முடியாத வல்லமைகள் இருக்கின்றன என்பதையும் உணர்ந்தவனுக்காகவே நான் வந்திருக்கிறேன். அவன் என்னை அனுமதித்தால், அவனுக்காக நான் எல்லாவற்றையும் செய்வேன். ஒரு மனிதன் தனக்கு உதவி தேவை என்பதை ஒப்புக்கொண்டால் மட்டும் போதும்; அதை நான் அவனுக்காகச் செய்வேன்.” தி ஷேடோ ஆஃப் அன் அகனி, 1166 R