“ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.”
ஆசீர்வாதங்களின் ஊற்றுகள்
நம்முடைய ஆண்டவர் இங்கே விவரித்த படம் ஒரு சாதாரண நீரோடை கிடையாது. அது பொங்கி வழியும் ஒரு ஊற்று. தொடர்ந்து “ஆவியால் நிறைந்திருங்கள்” (எபேசியர் 5:18). அப்பொழுது இயேசுவோடு உங்களுக்கிருக்கும் நெருக்கமான உறவின் இனிமை, உங்களுக்கு அது எவ்வளவு தாராளமாகக் கொடுக்கப்பட்டதோ, அதேபோல உங்களுக்குள்ளிருந்தும் தாராளமாகப் பொங்கி வழியும். அவருடைய ஜீவன் இருக்க வேண்டியபடி உங்களுக்குள் பொங்கி வரவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அதற்கு நீங்கள்தான் காரணம். ஏதோ ஒன்று அந்த ஓட்டத்தைத் தடுக்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஊற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று இயேசு சொன்னாரா? இல்லை. உங்களுக்குள்ளிருந்து “ஜீவனுள்ள தண்ணீர் ஆறுகள் ஓடும்” என்பதற்காகத்தான் நீங்கள் அந்த ஊற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்—இது கட்டுப்படுத்த முடியாத ஜீவன் (யோவான் 7:38).
நாம் ஊற்றுகளாக இருக்க வேண்டும். நம் மூலமாக இயேசு எல்லாருக்கும் ஆசீர்வாதமாக “ஜீவனுள்ள தண்ணீர் ஆறுகளாக” பாய்ந்து செல்ல வேண்டும். ஆனாலும் நம்மில் சிலர் சாக்கடலைப் போல இருக்கிறோம். எப்போதும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒருபோதும் கொடுப்பதில்லை. ஏனென்றால் ஆண்டவராகிய இயேசுவோடு நம்முடைய உறவு சரியாக இல்லை. அவரிடமிருந்து நாம் ஆசீர்வாதங்களைப் பெறுவது எவ்வளவு நிச்சயமோ, அதேபோல அவர் நம் மூலமாகவும் ஆசீர்வாதங்களைப் பொழியச் செய்வார் என்பதும் நிச்சயம். ஆனால் நாம் பெற்றுக்கொள்ளும் அதே அளவுக்கு ஆசீர்வாதங்கள் மற்றவர்களுக்குப் பாய்ந்து செல்லவில்லை என்றால், அவரோடு நமக்கு இருக்கும் உறவில் ஏதோ குறைபாடு இருக்கிறது. உங்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நடுவில் ஏதேனும் இருக்கிறதா? அவர் மேல் உங்களுக்கிருக்கும் விசுவாசத்தைத் தடுக்கும் விதமாக ஏதேனும் இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை என்றால், உங்களுக்குள்ளிருந்து “ஜீவனுள்ள தண்ணீர் ஆறுகள் ஓடும்” என்று இயேசு சொல்கிறார். இது நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் வெறும் ஆசீர்வாதம் இல்லை. அல்லது மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு அனுபவமும் இல்லை. மாறாக, இது உங்களுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஆறு. அந்த ஊற்றோடு இணைந்திருங்கள். இயேசு கிறிஸ்துவிடம் உங்களுக்கிருக்கும் விசுவாசத்தையும் அவரோடான உறவையும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது எந்தவொரு வறட்சியோ அல்லது ஜீவனற்ற தன்மையோ இல்லாமல், மற்றவர்களுடைய வாழ்க்கையில் அது எப்போதும் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருக்கும்.
ஒரு தனிப்பட்ட விசுவாசிக்குள்ளிருந்து ஆறுகள் பாயும் என்று சொல்வது கொஞ்சம் அதிகமாகத் தெரியிறதா? உங்களை நீங்களே பார்த்து, “ஆனால் எனக்குள் எந்த ஆறுகளும் ஓடுவதாகத் தெரியவில்லையே” என்று சொல்கிறீர்களா? தேவனுடைய கிரியைகளின் வரலாற்றைப் பார்த்தால், அவர் எளியவர்களையும், யாருக்கும் தெரியாதவர்களையும், புறக்கணிக்கப்பட்டவர்களையும் கொண்டுதான் பெரும்பாலும் தன் கிரியைகளைத் தொடங்கியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள்.
நீதிமொழிகள் 1-2; 1 கொரிந்தியர் 16
ஆஸ்வால்டின் ஞானம்
எந்த ஒரு வேதனையையும் அனுபவிக்காதவர்களிடம் இயேசு சொல்கிறார், “உங்களுக்காக என்னிடம் எதுவும் இல்லை; உங்களுடைய சொந்தக் காலில் நில்லுங்கள், உங்களுடைய சொந்தப் பலத்தை நம்புங்கள். தன்னால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய பாரம் தனக்கு இருக்கிறது என்றும், தன்னால் தொட முடியாத சக்திகள் இருக்கின்றன என்றும் உணர்ந்த மனிதனுக்காகவே நான் வந்திருக்கிறேன்; அவர் என்னை அனுமதித்தால், அவருக்காக நான் எல்லாவற்றையும் செய்வேன். தனக்கு உதவி தேவை என்பதை ஒரு மனிதன் ஒத்துக்கொண்டால் மட்டும் போதும், நான் அதை அவருக்காகச் செய்வேன்.” தி ஷேடோ ஆஃப் அன் அகோனி, 1166 R
Join the Community Conversation
Please login to share your thoughts, comments, and replies.