Hebrews 1:2a NLT
“இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”
Weekly Reflections • GRACE

குமாரனின் வெளிப்பாடு – ஏ. டபிள்யூ. டோசர்

ஆடி 25, 20261 நிமிட வாசிப்பு

இன்றைய காலகட்டத்தில் தேவன் மனிதர்களாகிய நம்மிடம் என்ன சொல்கிறார்? சுருக்கமாகச் சொன்னால், அவர் “இயேசு கிறிஸ்து என் அன்புக்குரிய குமாரன். அவருக்குச் செவிசாயுங்கள்!” என்று சொல்கிறார். இயேசுவின் மூலம் தேவன் சொல்லும் காரியங்களைக் கேட்டுக்கொள்ள இந்த தலைமுறை ஏன் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. இயேசுவில் தேவன் சொல்லும் செய்தி ஒரு தார்மீக அறிவிப்பாக இருக்கிறது. அது விசுவாசம், மனசாட்சி, நடத்தை, கீழ்ப்படிதல், விசுவாசத்தன்மை ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் இந்தச் செய்தியை நிராகரிக்கிறார்கள். அவர்கள் வேதவசனத்தின் முழுவதையும் நிராகரித்த அதே காரணத்தால்தான் இதையும் நிராகரிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய தார்மீக வார்த்தையின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக தேவன் பல வழிகளில் பேசினார். பரிசுத்தமான மனிதர்களைத் தூண்டி, அந்தச் செய்தியின் பகுதிகளை ஒரு புத்தகத்தில் எழுத வைத்தார். மக்கள் அதை விரும்புவதில்லை. முடிந்தவரை அதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா கிறிஸ்தவ நெறிகளுக்கும் இறுதிச் சோதனையாக தேவன் இதையே வைத்திருக்கிறார்.

சிந்தனை:
தேவன் ஒளியாக இருக்கிற தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் மூலம் பேசுகிறார். ஒளி, இருளையும் அதிலுள்ள அருவருப்பான பாவங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. நாம் அந்த ஒளியை வரவேற்று அதற்கு நம்மைத் திறக்கலாம். அல்லது அதிலிருந்து ஓடி, இருளுக்குள் மறைய முயற்சி செய்யலாம். ஆனால், தேவனுடைய ஒளியிலிருந்து மறைவது முடியாது.

ஜெபம்:
தேவனே, என்னை ஆராய்ந்து பார்த்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். முடிவில்லாத நித்திய வழியில் என்னை நடத்தும். இயேசுவின் நிமித்தம்.