John 14:27
“நான் சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன். எனது சொந்த சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுப்பதுபோல் இல்லாமல் நான் வித்தியாசமான சமாதானத்தைக் கொடுக்கிறேன். ஆகையால் உங்கள் மனம் கலங்காமல் இருக்கட்டும். அஞ்சவும் வேண்டாம்.”
Daily Devotionals
NEW MERCIES

நீங்கள் எப்போதாவது கலங்குறீங்களா?

ஆவணி 26, 20262 நிமிட வாசிப்பு

நம்முடைய வாழ்க்கையில் சில நேரங்களில், எதையும் அறியாமல் இருப்பதாலேயே நமக்கு சமாதானம் இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் நிஜங்களை நாம் உணர ஆரம்பித்தால், இயேசுவிடமிருந்து அதை பெற்றுக்கொள்ளாவிட்டால் உண்மையான உள்ளார்ந்த சமாதானம் கிடைக்கவே முடியாது. நம்முடைய ஆண்டவர் சமாதானம் பேசும்போது, அவர் சமாதானத்தை உருவாக்குகிறார். ஏனென்றால் அவர் பேசும் வார்த்தைகள் எப்போதும் “ஆவியாயும் ஜீவனாயும்” இருக்கின்றன (யோவான் 6:63). இயேசு பேசுவதை நான் எப்போதாவது பெற்றுக்கொண்டேனா? “…என் சமாதானத்தை உங்களுக்கு தருகிறேன்…” — அவருடைய முகத்தை நோக்கி, அவருடைய அமைதியான மனநிறைவை முழுமையாகப் புரிந்துகொண்டு பெற்றுக்கொள்ளும் சமாதானம்.

நீங்கள் இப்போது மிகவும் கலக்கமாக இருக்கிறீர்களா? தேவன் தமது ஆட்சியால் உங்களுடைய வாழ்க்கைக்குள் வர அனுமதிக்கும் அலைகளையும் புயல்களையும் கண்டு பயந்து, குழம்பிப் போய்விட்டீர்களா? உங்கள் விசுவாசத்தில் எல்லாவற்றையும் முயன்றுவிட்டும், சமாதானம், சந்தோஷம், ஆறுதல் என்று எந்த ஊற்றையும் இன்னும் காணவில்லையா? உங்கள் வாழ்க்கை முழுக்க வறண்டதாகத் தோன்றுகிறதா? அப்படியானால், மேலே நோக்கி ஆண்டவர் இயேசுவின் அமைதியான மனநிறைவைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவருடைய சமாதானத்தை வெளிப்படுத்துவது, நீங்கள் தேவனோடு சரியான நிலையில் இருக்கிறீர்கள் என்பதற்கான சாட்சி. ஏனென்றால், உங்கள் மனதை அவர்மேல் திருப்பும் சுதந்திரம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை அது காட்டுகிறது. நீங்கள் தேவனோடு சரியான நிலையில் இல்லையென்றால், உங்களைத் தவிர வேறு எதிலும் உங்கள் மனதைத் திருப்பவே முடியாது. இயேசு கிறிஸ்துவின் முகத்தை உங்களிடமிருந்து மறைக்கும் எதையும் அனுமதிப்பது, உங்களை கலக்கமடையச் செய்யும் அல்லது பொய்யான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.

இப்போது உங்களை அழுத்திக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சனையைப் பற்றி, நீங்கள் “இயேசுவை நோக்கிப் பார்க்கிறீர்களா” (எபிரெயர் 12:2) மற்றும் அவரிடமிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானால், அவர் உங்களுக்குள், உங்கள்மூலம் வெளிப்படும் அருளுள்ள சமாதானமாக இருப்பார். ஆனால், கவலைப்பட்டுக்கொண்டே அந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முயன்றால், உங்களுக்குள் அவர் செயல்படுவதை நீங்கள் முடக்கிவிடுவீர்கள். அதற்கான விளைவுகளை நீங்களே சந்திக்க வேண்டியிருக்கும். நாம் அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால்தான் கலக்கம் வருகிறது. ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவோடு ஆலோசிக்கும்போது, குழப்பம் நின்றுபோகிறது. ஏனென்றால் அவரில் எந்தக் குழப்பமும் இல்லை. எல்லாவற்றையும் அவர்முன் வெளிப்படையாக வையுங்கள். கடினமான சூழல்கள், இழப்பு, துயரம் எல்லாம் நேரும்போது, “உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக…” என்று அவர் சொல்வதைக் கேளுங்கள் (யோவான் 14:27).

சங்கீதம் 119:89-176; 1 கொரிந்தியர் 8


ஆஸ்வால்டிலிருந்து ஞானம்

நாம் எங்கே இருந்தாலும், இயேசுவுக்குள் நிலைத்திருக்க முடியாத வாழ்க்கைநிலை என்று எதுவும் இல்லை. நாம் எங்கே வைக்கப்பட்டாலும், அவருக்குள் நிலைத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். Our Brilliant Heritage, 946 R