John 1:48
“என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான். பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.”
Daily Devotionals
NEW MERCIES

மிஷனரி ஆயுதங்கள் (1)

புரட்டாதி 10, 20262 நிமிட வாசிப்பு

அன்றாட தருணங்களில் ஆராதிப்பது. ஒரு பெரிய நெருக்கடி வந்தால், நாம் போராட்டத்திற்குத் தயாராக இருப்போம் என்று நினைக்கிறோம். ஆனால், நெருக்கடி நம்மை உருவாக்குவதில்லை; நாம் ஏற்கனவே எப்படிப்பட்டவர்கள் என்பதை அது வெளிக்காட்டுகிறது, அவ்வளவுதான். “தேவன் என்னை ஒரு போராட்டத்திற்கு அழைத்தால், நிச்சயமாக நான் அதற்கேற்றபடி எழுந்து நிற்பேன்” என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஆனால், தேவனுடைய பயிற்சி மைதானத்தில் நீங்கள் ஏற்கனவே அப்படிச் செய்து பழகவில்லை என்றால், நீங்கள் எழுந்து நிற்க முடியாது. தேவன் உங்களுடைய வாழ்க்கையில் இப்போது ஏற்பாடு செய்திருக்கிற, உங்களுக்கு மிக அருகில் இருக்கும் சாதாரண வேலையை நீங்கள் செய்யவில்லை என்றால், நெருக்கடி வரும்போது, நீங்கள் போராட்டத்திற்குத் தகுதியானவர் அல்ல என்பது வெளிப்படும். நெருக்கடிகள் எப்போதும் ஒரு மனிதனுடைய உண்மையான குணத்தைக் காட்டும்.

தேவனுடன் தனிமையில் கொண்டுள்ள ஆராதனை உறவுதான் ஆவிக்குரிய தகுதிக்கான மிக முக்கியமான அடிப்படை. நாத்தான்வேல் இந்தப் பகுதியில அனுபவித்ததுபோல, தனிப்பட்ட “அத்திமர” வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லாத ஒரு காலம் வரும். அப்போது எல்லாமே வெளிச்சத்துக்கு வரும். உங்களுடைய வீட்டிலேயே அன்றாட சூழ்நிலைகளில் நீங்கள் தேவனை ஆராதிக்காமல் இருந்தால், அங்கே நீங்கள் பயனற்றவராகத்தான் இருப்பீர்கள். தேவனோடு உங்களுடைய தனிப்பட்ட உறவில் உங்களுடைய ஆராதனை சரியாக இருந்தால், அவர் உங்களை விடுதலை செய்யும்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள். தேவன் மட்டுமே பார்த்த அந்த மறைமையான வாழ்க்கையில்தான் நீங்கள் முழுமையாகத் தகுதிபெறுகிறீர்கள். நெருக்கடியின் அழுத்தம் வந்தபோது, தேவன் உங்களை நம்ப முடியும்.

“என்னுடைய தற்போதைய சூழ்நிலையில் நான் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முடியும் என்று எதிர்பார்க்க முடியாது; எனக்கு இப்போது ஜெபிக்கவும் வேதாகமம் படிக்கவும் நேரம் இல்லை; அதுமட்டுமில்லாமல், எனக்கான போராட்ட வாய்ப்பு இன்னும் வரவில்லை. அது வந்தால் நிச்சயமாக நான் தயாராக இருப்பேன்” என்று நீங்கள் சொல்கிறீர்களா? இல்லை, நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள். அன்றாட தருணங்களில் நீங்கள் தேவனை ஆராதிக்காமல் இருந்தால், தேவனுடைய பணியில் நீங்கள் ஈடுபடும்போது, நீங்களே பயனற்றவராக இருப்பதோடு, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் தடையாக மாறிவிடுவீர்கள்.

ஊழியத்திற்கான ஆயுதங்கள் கிடைக்கும் தேவனுடைய பயிற்சி மைதானம், ஒரு விசுவாசியின் மறைவான, தனிப்பட்ட, ஆராதனை வாழ்க்கைதான்.

நீதிமொழிகள் 8-9; 2 கொரிந்தியர் 3


ஆஸ்வால்டிடமிருந்து ஞானம்

நாம் தேவனை அவருடைய ஆசீர்வாதங்களுக்காகத் தேடுவதை நிறுத்தும்போது, அவரை அவருக்காகவே தேடுவதற்கு நமக்கு நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையின் ஒழுக்க அடித்தளங்கள், 728 L